பெராக்கா தீர்க்கதரிசன ஊழியங்கள்.
பாடத்திட்ட கண்ணோட்டம்
வாழ்த்துக்கள். பெராக்கா தீர்க்கதரிசன ஊழியங்களின் இணையவழி கற்றல் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
'' ஒரு தீர்க்கதரிசியின் உருவாக்கமும் ஊழியமும் '' என்னும் தீர்க்கதரிசன வெளிப்பாட்டு மண்டலத்திற்குள் நடைபோட வைக்கும் ஒரு நெடும்பயணத்தை துவக்க இருக்கிறீர்கள். இது தீர்க்கதரிசி எசேக்கியா பிரான்சிஸ் அவர்களுடைய ஆகச்சிறந்த ஒரு சரித்திரப் படைப்பாகும். இது உருவான பின்னணி வெகு ஆச்சரியமானது. 2020 ம் ஆண்டினுடைய பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் நமது பூண்டி வளாகத்தில் ஒரு மாதமெனத் துவங்கி, வந்தவர்கள் வெளியேற முடியாத அரசு கட்டுப்பாடுகளினால் ஒன்பது மாதங்கள் நீடித்துவிட்ட பெண்கள் பாடசாலையில், ஓங்கி ஒலித்த தீர்க்கதரிசன சத்தம் இது. வெளியே கொத்துக் கொத்தாய் மனித உயிர்களை பெருந்தொற்று ஏதோ குப்பை கூளம் போல ஒரே குழியில் தள்ளிப் புதைத்துக் கொண்டிருந்த கொடூரங்களின் குரூரம் தாங்காமல் குமுறிக் கொண்டிருந்த தீர்க்கதரிசியின் உள்ளறைப் பெருமூச்சுக்களை, மன்றாட்டு ஓலங்களை உள்ளடக்கி உடைத்துப் பெருக்கெடுத்த தீர்க்கதரிசனப் பிரவாகம் தான் இந்தப் பாடங்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலான நொறுக்குதலின் பாதையில் ஒரு தீர்க்கதரிசியாய் தான் உருவாக்கப் பட்ட விதத்தை,ஒன்பது மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளில் (ஒவ்வொன்றும் நான்கு மணி நேரங்களுக்கு மேல்) செத்துக் கொண்டிருக்கும் தேசத்தின் தலையெழுத்தை திருத்த ஒரு தீர்க்கதரிசன சந்ததி எழுந்து விடாதா என ஏங்கி ஏங்கி கண்ணீரோடு அடுத்த தலைமுறைக்கு வார்த்துக் கொடுத்த வரலாற்றுப் பொக்கிஷங்கள் தான் இந்தப் பாடங்கள்.
இது வெறும் பாடத்திட்டமன்று. இது தேவனுடைய பாரத்திட்டம். ஒரு தீர்க்கதரிசியாய் உங்களை வார்த்து உருவாக்க தேவனுடைய இதய பாரம் இந்தப் பாடம். எனவே, இந்தப் பாடத்திட்டத்தின் உயர்ந்தபட்ச பலன்களை அனுபவிக்க கலந்துரையாடல் பாணியில் பதிலளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த வீடியோ வகுப்புகளுக்கு உங்கள் தரமான நேரத்தை (ஏனோதானோ வென்று அல்ல) முதலீடு செய்ய முன்வாருங்கள். அந்த மனநிலைக்கு முதலாவது உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு பாடத்திலும் ஒரு சுருக்கமான முன்னுரையும் அதைத் தொடர்ந்து நீங்கள் கேட்டு கவனிப்பதற்கான ஒரு வீடியோ செய்தியும் இருக்கும். மாணவர்கள், அந்த செய்தியைக் கேட்கும் போது, மின்னல் போல சட்டென்று உங்கள் மனதில் பளிச்சிடும் வெளிச்சத்தை உடனே குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அதுவே தேவன் உங்கள் ஆவியில் உங்களோடு பேசுவதாகும். தீர்க்கதரிசி எசேக்கியா அவர்கள் இந்த முதல் பாடத்திலேயே குறிப்பிடுவது போல இது ஒரு வேத ஆராய்ச்சியோ, இறையியல் போதனையோ அல்ல. இது நம் காலத்திற்கான, நடப்பு தேவ சத்தம். ஆகவே ஆவியானவருக்குத் துல்லியமாய் இருந்து, ஆவியின் அலைவரிசையில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
மாணவர்களின் வசதிக்கேற்ப இந்தப் பாடத்திட்டம் ஐந்து பருவமுறைகளைக் (modules) கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் பருவமுறை 1 முதல் 20 வீடியோ வகுப்புகளை உள்ளடக்கியது.
இரண்டாம் பருவமுறை 21 முதல் 40 வரையிலான வீடியோ வகுப்புகளை உள்ளடக்கியது.
மூன்றாம் பருவமுறை 41 முதல் 60 வீடியோ வகுப்புகளை உள்ளடக்கியது.
நான்காம் பருவமுறை 61 முதல் 80 வீடியோ வகுப்புகளை உள்ளடக்கியது.
ஐந்தாம் பருவமுறை 81 முதல் 100 வீடியோ வகுப்புகளை உள்ளடக்கியது.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
இந்த தீர்க்கதரிசனப் பயணத்தை ஆனந்தமாய் அனுபவிக்க எங்கள் வாழ்த்துக்கள்.
பெராக்கா குழு.